பொள்ளாச்சி: பாம்பு தீண்டியதால் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகக் கருதப்பட்ட இளையர் திடீரென கண்விழித்தார். இந்தச் சம்பவம் பொள்ளாச்சியில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள தனியார் நிறுவனத்தில் 24 வயதான லியாகத் என்பவர் பணியாற்றி வந்தார். இரு நாள்களுக்கு முன்பு இவரது முதுகில் கட்டுவிரியன் வகை பாம்பு கடித்துவிட்டது.
இதனால் உடல் முழுவதும் பாம்பின் நச்சு வேகமாகப் பரவியதை அடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்தனர். இதனால் கதறி அழுத போதிலும் அவரது குடும்பத்தார் நம்பிக்கை இழக்கவில்லை.
ஈரோட்டில் உள்ள பாம்புக்கடி சிகிச்சை மையத்தில் அவரை அனுமதித்தனர். இந்நிலையில் திடீர்த் திருப்பமாக மூளைச்சாவு அடைந்ததாகக் கருதப்பட்ட லியாகத் உயிர் பிழைத்துள்ளார். நினைவு திரும்பிய அவர் நலமுடன் வீடு திரும்பினார்.