தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சூழலியல் குழு மத்திய அரசுக்கு வலியுறுத்து
திருவாரூர்: தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தின் விவசாயிகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளைச் சேர்ந்தோரும் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சூழலியல் துணைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் வ.சேதுராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகிய தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி, நிலக்கரி படுகை மீத்தேன் (சிபிஎம்) மற்றும் நிலத்தடி நிலக்கரியை வாயுவாக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அழைப்பாணைக் குறிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதை சார்ந்த பொருட்களை எடுக்க மத்திய அரசு அழைப்பாணை விடுத்துள்ளது. அதில் தமிழகத்தின் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் நிலக்கரிப் படுகை மீத்தேன் திட்டத்திற்குத் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் பிறப்பித்த நிரந்தரத் தடையும் உள்ளது.
முப்போகம் விளையும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை கொண்ட முக்கிய விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், விவசாயத்திற்கும், நில வளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் எதிரானது. எனவேதான் தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் காவிரி டெல்டா பகுதியில் ஏலம் விடப்பட்டுள்ள நடவடிக்கை தமிழக அரசின் பாதுகாப்பு மண்டல அரசாணைக்கு எதிராக உள்ளது. ஆகவே மத்திய அரசு உடனடியாக மேற்கண்ட அழைப்பாணையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள தமிழகப் பகுதிகளை விலக்கிக்கொள்ள வேண்டும்," என சேதுராமன் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் நிலக்கரி எடுக்கும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நெல் வயல்களை நிலக்கரிச் சுரங்கமாக்கினால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேச உள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். திருவாருர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில், நிலக்கரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.