உதகை: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தின்போது, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இணையம் வழியாக உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் அறை முன்பதிவு செய்கின்றனர். இவ்வாறு இணையத்தில் பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் மோசடி செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து உதகை இணைய குற்றவியல் ஆய்வாளர் பிலிப் கூறியதாவது, உதகையில் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் அறை முன்பதிவு செய்வார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட மோசடிப் பேர்வழிகள், இங்கு ஏற்கெனவே உள்ள ஓட்டல்கள் அல்லது ஓட்டல்களே இல்லாமல் ஏதாவது ஒரு பெயரில் ஓட்டல்கள் இருப்பதுபோல இணையத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்வார்கள்.
மேலும், 'சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உதகையில் அறை உள்ளதா என்று கூகுளில் யாராவது தேடினால், இவர்கள் போலியாக உருவாக்கிய முகவரி, வங்கிக் கணக்கு எண் விவரங்கள் முதலில் வரும்படி செய்துவிடுகின்றனர்.
இதைத்தொடர்ந்து அறை முன்பதிவு செய்து வங்கிக் கணக்கு எண் மூலமாக சுற்றுலாப் பயணிகள் பணம் செலுத்துகின்றனர். அதன்பின், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லும்போது மோசடி சம்பவம் நடந்திருப்பது தெரிய வருகிறது. இதேபோல் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதுகுறித்து வலைத்தள நிறுவனத்துக்குப் புகார் அளித்து, அந்த போலி இணையத்தள முகவரியை நீக்க அறிவுறுத்தி கடிதம் அளித்துள்ளோம். அதேபோல, இணையத்தளம் மூலமாக பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலாப் பயணிகள் அந்த ஓட்டலை தரைவழி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தலாம். இல்லாவிட்டால் நம்பிக்கைக்குரிய செயலிகள் மூலமாக அறை முன்பதிவு செய்யலாம்," என்றார் அவர்.

