மோடி வருகையால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி வரும் 8ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். மேலும், சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதேபோல, ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் தமிழகக் காவல்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
நெகிழிப்பையை தவிர்க்க சைக்கிளில் விழிப்புணர்வுப் பேரணி
பல்லடம்: நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்லாடம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு திருச்செந்தூருக்குச் செல்கின்றனர் சமூக ஆர்வலர்கள் சிலர்.
பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி திருச்செந்தூர் வரை சைக்கிள் பயணம் நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது. இவர்கள் ஏறக்குறைய 350 கி.மீ. தூரம் பயணம் செய்து, இன்று மாலை திருச்செந்தூர் சென்று அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

