வினோத் கருப்பையா
நடிகர் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. சமய நல்லிணக்கம், எதிர்பார்ப்புகள் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை என கதைக்களம் அமைந்துள்ளது.
இருப்பினும் அப்படத்தின் கதை தங்களுடையது என்று சில எழுத்தாளர்கள் தமிழக ஊடகங்கள் வழி செய்தி வெளியிட்டுள்ளனர். அவர்களில் 'சிங்கப்பூரில் சரவணன்' என்ற நாவலை எழுதிய திரு மில்லத் அகம்மதும் ஒருவர். திரைப்படத்தின் கதை யாருடையது, கதைக்கரு திருடப்பட்டதா என்பது குறித்து எழுத்தாளர் மில்லத், அயோத்தி படத்தின் தயாரிப்பாளர், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருடன் தமிழ் முரசு தொடர்புகொண்டு பேசியது.
"சிங்கப்பூரில் சரவணன் என்ற என்னுடைய நாவல், 2016ல் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்ற கதை. அது 2020ல் சென்னை புத்தகக் காட்சியில் நூலாகவும் வெளியானது," என்றார் மில்லத்.
"எனது நாவலின் மையக்கருத்து வெளிநாட்டில் இறந்தவரின் உடலை விமானம் மூலம் ஏழு சான்றிதழ்களுடன் இந்தியாவிற்குக் கொண்டு செல்வதைப் பற்றியது. அயோத்தி திரைப்படத்திலும் அதேபோன்ற கதைக்களம் தான் உள்ளது," என்று மில்லத் குறிப்பிட்டார்.
முக்கியமாக நாவலில், இறந்த இந்து நபரின் உடலைக் கொண்டு செல்வது ஒரு கிறிஸ்துவரும், இஸ்லாமியரும். அதேபோன்றுதான் அயோத்தி படத்திலும் கதை அமைந்துள்ளது என்றார் எழுத்தாளர் மில்லத்.
தமது கதைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஊடகங்களை நாடியதாக மில்லத் கூறினார்.
அயோத்தி திரைப்படத்தின் கதை பொதுநலம் தொடர்பான கதை. வெளி ஊர்களுக்குச் செல்லும்போது ஒரு தவறான அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை எடுத்துக்கூறும் விழிப்புணர்வுப் படம் இது. படத்தில் சமய நல்லிணக்கம் இருப்பது கூடுதல் சிறப்பு என்றார் படத்தைத் தயாரித்த Trident Art நிறுவனத்தின் ரவீந்திரன்.
"படத்தின் கதை திருடப்பட்டதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பணம் கொடுத்துதான் கதையை வாங்கியது. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் அவர்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்வது நல்லது," என்றார் ரவீந்திரன்.
"அயோத்தி திரைப்படக் கதை என்னுடையது. அது யாருக்கும் சொந்தமானது என்று கூறமுடியாது. நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டும் உண்மையான சம்பவங்களைக் கலந்தும் எழுதப்பட்ட கதை இது. அது படத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
"ஒரு கதை என்பது உண்மையும் கற்பனையும் கலந்து படைப்பாளியின் கலைத்திறனால் உருவாவது. சாலை விபத்து மற்றும் குற்றச் செய்திகளுக்கு யாரோ உரிமை கோரினால் எந்தப் படைப்பாளராலும் எதையும் எழுத முடியாது," என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

