கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. எட்டு மாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு மகப்பேற்று வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர் கவிதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் மகேஸ்வரியை சோதித்துப் பார்த்ததில் அவரது கருவில் மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதில் அவருக்கு மூன்று அழகிய ஆண் குழந்தைகள் பிறந்தன. இருப்பினும் குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால் இன்கியூபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டன.
தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடந்த 40 நாட்களாக குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த மூன்று குழந்தைகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதுடன் எடையும் அதிகரித்தது.
இதனால் ஆரோக்கியத்துடன் இருக்கும் மூன்று குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி புதன்கிழமை காலை மூன்று குழந்தைகளையும் மருத்துவக் குழுவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரே நேரத்தில் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததால் குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவக் குழுவினர் பரிசு வழங்கினர்.

