சென்னை: தமிழ்நாடு அரசு வேளாண் மண்டலத்தில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்குத் தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
பின்னர் நிலக்கரிச் சுரங்கம் தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது.
மாநில அரசுடன் முதலில் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.
தமிழ்நாடு அரசு ஒருபோதும் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்துக்குத் தெரிவித்துள்ளோம்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தில் ஒருபோதும் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்றார். தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, தனியாருக்கு தாரைவார்ப்பதை பற்றி பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் பேசுவது வேடிக்கையாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்தபோது அதில் சிலவற்றை அதிமுக விட்டுவிட்டது என்று கூறினார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா: மாநில அரசுக்குத் தெரிவிக்காமலேயே மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது தொடர்பான தகவல் வெளியான உடனேயே எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.
நிலக்கரிச் சுரங்கம் அமைக்க அனுமதிக்கப்படாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. நெற்களத்தில் நிலக்கரியா என டெல்டா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்று டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
அதிமுக: காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது. கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.
காங்கிரஸ்: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசினார். டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் இதுபோன்ற அறிவிப்பை விடுத்துள்ளது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். முதலமைச்சர் கடிதத்திற்கு மதிப்பளித்து திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டார்.
பாமக: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார்.
நிலக்கரித் திட்டத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கு நன்றி. தஞ்சை தரணி என்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த வி.சி.க. வலியுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி வி.சி.க. உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பேசினார்.