தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை: திருச்சியில் ரூ.600 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப்.6) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன் விவரம்: சிப்காட் பூங்காவில் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் பயன்பாட்டிற்காக ரூ.30 கோடியில் 600 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் கட்டப்படும் என்று கூறினார்.
தண்ணீரைப் பாதுகாக்கும் வகையில் நீர்ப் பயன்பாடு, விரயம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் நவீன முறையிலான கருவிகளும் அமைப்புகளும் சிப்காட்டில் உருவாக்கப்படும் என்று கூறினார்.
மேலும், இருங்காட்டுக்கோட்டை மற்றும் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.20 கோடியில் இரண்டு தங்குமிடம் கட்டப்படும் என்று அவர் கூறினார். தமிழ் நாட்டில் நிலவும் வெப்பத்தைத் தணிக்கும் வகையில், மணப்பாறை, தேனி, திண்டிவனம், சூளகிரி ஆகிய சிப்காட்டுகளில் ரூ.20 கோடியில் நூறாயிரம் மரக்கன்றுகள் நடப்படும். விருதுநகர், தேனி, சூளகிரி சிப்காட்டுகளில் நிர்வாக அலுவலகம் கட்டப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் காரணியில் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.100 கோடியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும். ரூ.600 கோடியில் திருச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் ரூ.70 கோடியில் காரைக்குடி மற்றும் ராசிபுரத்தில் சிறிய அளவிலான தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் அமைக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், கிண்டியில் ரூ.175 கோடியில் தொழில் வளாகம் அமைக்கப்படுவது குறித்துத் தெரிவித்தார். இதன்மூலம் 2,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். செங்கல்பட்டு மாவட்டத்தின் முள்ளிகொளத்தூரில் 28 ஏக்கரில் ரூ.14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். மேலும் தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை உலக அளவில் ஒருங்கிணைக்க துபாயில் புத்தொழில் மையம் அமைக்கப்படும் என்றார் அமைச்சர் அன்பரசன்.