செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: விசாரிக்க பெரும் தனிப்படை

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனம், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்புத் தொகைகளுக்கு மாதம் 25% முதல் 30% வரை வட்டி தரப்படும் என்று கிட்டத்தட்ட நூறாயிரம் பேரிடம் இருந்து சுமார் ரூ.2,500 கோடி முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் 19 துணை நிறுவனங்கள் அவற்றின் மேலாண்மை இயக்குநர் குழு உறுப்பினர்கள் என 52 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் ஆருத்ரா மற்றும் அதன் துணை நிறுவனங்களான ஹிஜாவு, எல்.என்.எஸ்., ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றின் மீதான வழக்கை விசாரிக்க 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.7 லட்சம் மோசடி:

வாட்ஸ்அப் மூலம் வந்த வினை

கிருஷ்ணகிரி: ஓசூரை அடுத்த மத்திகிரி பகுதியில் பொறியியல் பட்டதாரியான இளம்பெண் சுமதியிடம் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி நூதன முறையில் மர்ம கும்பல் பணம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "எங்களிடம் குறைந்த முதலீடு செய்து, தொழில் தொடங்கி அதன் மூலம் லாபம் கிடைக்கும்," என்ற குறுந்தகவலைக் கண்டு, அந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசிய சுமதி, கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாயை முதலீடாகக் கொடுத்து ஏமாந்தார். இது குறித்து இணைய குற்றவியல் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வீடு திரும்பினார் ஈ.வி.கே.எஸ்

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முழுமையாகக் குணமடைந்து நேற்று நண்பகல் 12 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது செய்தியாளர் ஒருவரிடம், "என்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. இப்போது நலத்தோடு இருக்கிறேன்," என்றார். திரு இளங்கோவன் மார்ச் 15ஆம் தேதி மூச்சுப் பிரச்சினைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.