11 மருத்துவமனைகள் கட்டியது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படும் என்று வெளியான தகவல்கள் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொதுத்துறைக்கும் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அச்சமயம் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.
மொத்தம் ரூ.4 ஆயிரம் கோடிசெலவில் இந்தக் கல்லூரிகள் கட்டப்பட்ட நிலையில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சில தரப்பினர் புகார் எழுப்பினர்.
இதையடுத்து நடப்பு திமுக அரசு, இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியதில் மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அத்துறையின் அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர்.
எனினும் எடப்பாடி பழனிசாமி தற்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசின் அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதியிருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை நிர்வாகம்தான் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதி பெற்றிருந்தது என்றும் அதற்கான ஒப்பந்தங்களையும் வழங்கி இருந்தது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
இதில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஒப்பந்ததாரர்கள், அந்த கட்டடங்களைக் கட்டிய அரசு பொறியாளர்களிடம் விசாரணை நடத்துவதுடன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிய ஆதாரங்கள், நடைமுறைகளின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விசாரணையானது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

