கிருஷ்ணகிரி: தளி அருகே 700 ஆண்டுகள் பழைமையான ஹொய்சாளர் கால வீரபத்திரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழுவினருடன் இணைந்து கும்மளாபுரம் எனும் இடத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அது கூறியது.
அந்த ஊரின் வீரபத்திரர் கோயில் இடிக்கப்பட்டு, புதுப்பிப்புப் பணி நடைபெற்று வருவதை அறிந்து குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது, இடித்து அகற்றப்பட்டிருந்த கற்களுக்கிடையே ஒன்றரை அடி உயரத்தில் மாக்கல்லில் செதுக்கப்பட்ட வீரபத்திரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹொய்சாளர் ஆட்சியின் அடையாளங்களாகப் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால், மாக்கல்லால் செதுக்கப்பட்ட சிலை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
சிலை தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறின.
பல ஆண்டுகளாகப் பூமியில் புதையுண்டிருந்ததால் சிலை தேய்மானத்துடன் காணப்படுவதாகக் கூறப்பட்டது.
வீரபத்திரர் வலக்கையில் கத்தி ஏந்தியவாறு இடக்கையைப் பீடத்தில் ஊன்றியுள்ள கேடயத்தின்மீது வைத்திருப்பதுபோலவும் வலது, இடது பின் கரங்களில் முறையே அம்பு, வில்லை வைத்திருப்பதுபோன்றும் அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
வலப்புறம் சிறிய உருவமாக வணங்கும் நிலையில் ஆட்டுத் தலையுடன் கூடிய தட்சனின் உருவமும் இடப்புறம் வீரபத்திரரைப்போலவே கைகளில் கத்தி, கேடயத்தோடு நிற்கும் தேவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழக வீரபத்திரர் சிலை, சிற்பங்களில் தேவி உருவம் பொறிக்கப்படுவதில்லை என்பதால் இந்தச் சிலை குறித்தும், கும்மாளபுரம் வட்டாரம் குறித்தும் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

