சென்னை: கணினித்துறையில் சாதித்து வரும் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பரத் கார்த்திகிற்கு உலகின் இளம் தொழில்முனைவர் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
நோபல் உலக சாதனைப் புத்தகத்தின் சார்பாக வழங்கப்பட்டு இருக்கும் இந்த விருது மேலும் சாதிக்க தமக்கு ஊக்கம் அளிப்பதாக பரத் கார்த்திக் தெரிவித்து உள்ளார்.
கோவையைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், ராஜேஷ்வரி தம்பதியரின் மகனான பரத்துக்கு இப்போதுதான் 14 வயதாகிறது. பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயது முதல் கணினித்துறையில் ஆர்வம் கொண்டிருந்த பரத்தின் திறமையைக் கண்டு வியந்த பெற்றோர், மடிக்கணினி, கணினி சாதனங்களை வாங்கிக் கொடுத்து மகனை ஊக்கப்படுத்தி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் சமூக ஊடகங்களைப் போன்று சில இணையத்தளங்களை உருவாக்கினார் பரத். பின்னர் சில கைப்பேசி செயலிகளையும் அடுத்தடுத்து அவர் உருவாக்கியபோது, அவர் படித்த பள்ளியின் நிர்வாகத் தரப்பும் வியந்துபோனது.
பரத் உருவாக்கியுள்ள பத்துக்கும் மேற்பட்ட செயலிகளை பல்வேறு பள்ளி, கல்லூரிகள் பயன்படுத்தி வருகின்றன.
மாணவர்களுக்கு அன்றாடம் நடத்தப்படும் வகுப்புகள், தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பள்ளி நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்தக் கைப்பேசி செயலி மூலம் பெற்றோர் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த இளம் வயதிலேயே கோவையில் உள்ள சில கல்லூரிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றி வரும் பரத்தின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், நோபல் உலக சாதனை புத்தகம் அவருக்கு உலகின் இளம் தொழில் முனைவர் எனும் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. பரத்துக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

