திருவாரூர்: ஒரே நாளில் பத்துப் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதால் திருவாரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அனைவருமே கைது செய்யப்படும் வரை ஏராளமான மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர் என்பதும் அவர்கள் மீது யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் ஏற்படவில்லை என்பதும் காவல்துறைக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூரில் உள்ள போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன் பேரில் நன்னிலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, முறையாக மருத்துவம் படிக்காமல் சிலர் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும் ஊசி செலுத்தியும் சிகிச்சை அளித்தது அம்பலமானது. அனைவரும் போலி மருத்துவர்கள் என்பதை உறுதி செய்த காவல்துறையினர் பத்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அண்மையில் சேலத்திலும் இரண்டு போலி மருத்துவர்கள் சிக்கினர். அங்கு மருத்துவத்துறை இணை இயக்குநர் சாந்தி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இருவரும் பிடிபட்டனர். அடுத்தடுத்து மேலும் பல மாவட்டங்களில் போலி மருத்துவர்களைக் கண்டறியும் நடவடிக்கை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.