புதுவை: சாலையில் சென்ற வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டவர்கள் தன்னையும் தாக்கக்கூடும் என்ற பயத்தில் தான் வந்த இருசக்கர வாகனத்தைத் திருப்பிச் சென்ற இளையர் மரத்தில் மோதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் புதுவையில் நள்ளிரவு வேளையில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள முத்துப்பிள்ளைபாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான 26 வயது விஷால் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் கடற்கரை நோக்கி தமது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சில இளையர்கள் அவ்வழியே சென்ற வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் விஷாலைத் தாக்குவதுபோல் தனது கைகளை உயரத் தூக்கியதால் அவர் அதிர்ந்து போனார்.
ரகளை செய்தவர்களிடம் இருந்து தப்பிக்க உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை தாம் வந்த வழியே திருப்பி அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டார் விஷால்.
ஆனால், வேகமாகச் சென்றதால் சற்றே நிலைதடுமாறியதில், அவர் சென்ற வாகனம் சாலையோர மரத்தில் பலமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட விஷால் படுகாயமடைந்தார்.
பின்னர் பொதுமக்கள் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதனிடையே, விஷாலைப் பயமுறுத்தும் வகையில் செயல்பட்டதாக விபத்து நிகழ்ந்த இரவு ரகளையில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற விஷால், மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கருவிகளில் பதிவாகி இருந்தது.
விலை வீழ்ச்சி: தக்காளிச் செடிகளை டிராக்டர் ஏற்றி அழிக்கும் விவசாயிகள்
தர்மபுரி: தக்காளிக் கொள்முதல் விலை வீழ்ச்சி கண்டதை அடுத்து திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனையடுத்து, பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட தக்காளிச் செடிகளை விவசாயிகள் பலர் டிராக்டர் ஏற்றி அழித்து வருகின்றனர். ஒரு கிலோ தக்காளிக்குச் சந்தையில் பத்து ரூபாய் மட்டுமே கிடைக்கிறது என்றும் 22 ரூபாய் கிடைத்தால் மட்டுமே குறைந்தபட்ச லாபம் பெற முடியும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பதும் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என அவர்களால் சுட்டிக்காட்டப் படுகிறது.
ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றதால் இழப்பீடு 50% குறைப்பு
சென்னை: பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறு வனுக்கு அளிக்கப்பட வேண்டிய ஈழப்பீட்டுத் தொகையில் 50 விழுக்காட்டை கழிக்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த 14 வயதான ஆகாஷ் என்ற சிறுவன் ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தான். இதையடுத்து ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சிறுவனின் பெற்றோர் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். இம்மனு மீதான விசாரணையின்போது, பேருந்து நகரும் வேளையில் ஆகாஷ் அதிலிருந்து இறங்க முற்பட்டதால்தான் விபத்து நிகழ்ந்தது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, ஓடும் பேருந்தில் இருந்து இறங்குவது மாணவர் களுக்கு வழக்கமாகிவிட்டது என்றும் சிறுவன் ஆகாஷும் அதேபோன்று செயல்பட்டதால் இழப்பீட்டுத் தொகையில் 50% கழிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.
கிரிக்கெட் விளையாடிய இளையர் திடீரென மயங்கி விழுந்து மரணம்
சென்னை: கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது இளையர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். சென்னைக்கு அருகே உள்ள புழல் பகுதியில் தனியார் விளையாட்டுத் திடலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் (35 வயது) என்பவர் தன் நண்பர்களுடன் தனியார் திடலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடலோரம் ஒதுங்கிய சாமி சிலைகள்
நாகை: மயிலாடுதுறை அருகே கடற்கரையில் ஒதுங்கிய மூன்று கற்சிலைகளைக் காவல்துறை மீட்டது. அப்பகுதி மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கடலோரப் பகுதியில் அச்சிலைகளைக் கண்டனர். இதனையடுத்து, சீர்காழி வட்டாட்சியரும் காவல்துறையினரும் விரைந்து சென்று அச்சிலைகளைப் பார்வையிட்டு பறிமுதல் செய்தனர். அவற்றை தொல்லியல்துறை நிபுணர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

