சென்னை: சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாய்க்கடிக்கு சிகிச்சைக்கு நாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இரண்டு பெரிய மருத்துவமனைகளில் மட்டும் தினமும் 15 பேர் வரை ரேபிஸ் தடுப்பூசி போட வருகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகளே நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட மாதம் 20 குழந்தைகள் வருகிறார்கள்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 6,261 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு தினமும் 5 பேர் நாய்க்கடி சிகிச்சைக்கு வருகிறார்கள்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 1,500 டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கு தினமும் 10 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வருகிறார்கள்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு 1,385 முறை ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

