சென்னை: தமிழகத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா (படம்) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
ஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையிலும் அதன் பிறகு 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையும் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார்.
2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் நரேஷ் குப்தா. இவை தவிர, தமிழகத்தில் 12 இடைத்தேர்தல்களை சர்ச்சையின்றி நடத்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர், அங்கு செல்ல மனமின்றி தமிழகத்திலேயே தங்கிவிட்டார். அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசித்து வந்த அவரது உடல்நிலை கடந்த 5ஆம் தேதி திடீரென பாதிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

