சென்னை: தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியாகத் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) புதுவையில் மாநிலக் கட்சி எனும் அங்கீகாரத்தை இழந்துள்ளது.
இதேபோல் பல்்வேறு மாநிலங்களில் மேலும் பல முக்கிய கட்சிகள் இவ்வாறு மாநிலக் கட்சி எனும் அந்தஸ்தை இழந்திருப்பது சம்பந்தப்பட்ட கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு விதிமுறைகள், தகுதிகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, மத்திய தேர்தல் ஆணையம் மாநில, தேசிய கட்சிகள் என்ற அங்கீகாரத்தை வழங்குகிறது.
அவ்வப்போது இதே அடிப்படையில் அத்தகைய அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தும் அறிவிப்புகளை வெளியிடும்.
அந்த வகையில் திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தேசிய கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இழந்துள்ளன.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரித்துள்ளது.
ஆந்திராவில் பிஆர்எஸ் கட்சி, உத்தரப் பிரதேசத்தில் ஆர்எல்டி கட்சிகளும் தேர்தல் களத்தில் சாதிக்காததால் அவற்றின் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளன.
தற்போது காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய ஆறு கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே புதுவை மாநிலத்தில் கடந்த 2011 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் பாமக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை.
மேலும் குறிப்பிட்ட விழுக்காடு அளவுக்கு வாக்குகளையும் பெறவில்லை. இதையடுத்து பாமகவின் மாநிலக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
புதுவையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அக்கட்சியின் நடப்புத் தலைவர் அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்பதே பாமக தலைமையின் கடந்த கால விருப்பமாகவும் வியூகமாகவும் இருந்தது.
அதனால் புதுவை அரசியல் களத்தில் அக்கட்சி தீவிரமாக இயங்கி வந்தது.
இந்நிலையில், புதுவையில் மாநிலக் கட்சி எனும் அங்கீகாரத்தை இழந்துள்ளது பாமக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த தேர்தலில் புதுவையில் பாமகவுக்கு அதன் மாம்பழச் சின்னம் ஒதுக்கப்படுவதும் கேள்விக்குறியாகி உள்ளது.

