சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து நேற்று மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
பாலியல் தொல்லை தொடர்பாக அக்கல்லூரியில் பணியாற்றும் ஹரி பத்மன் என்ற பேராசிரியர் கைதாகி உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரம்பரியமிக்க கல்லூரி என்பதால் புதிதாக வெடித்துள்ள சர்ச்சை குறித்து தென் மாநில மக்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக தமிழக ஊடகங்களில் வெளியான பல்வேறு செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் குறித்து ஆறு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
மாநில மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணைக்குப் பின்னர் அது தொடர்பான அறிக்கையைத் தமிழக அரசிடம் அளிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

