சென்னை: கிண்டியில் கிங் நிறுவன வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பில் புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படுகிறது.
ஏறத்தாழ ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமையும் புதிய மருத்துவமனை இவ்வாண்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ஆறு தளங்கள் கொண்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஆயிரம் படுக்கைகள் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டது.
அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று தெரிகிறது.
நேற்று முன்தினம், மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருவரும் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டனர்.
அவசர அறுவை சிகிச்சை அரங்கம், மருத்துவ வாயுக் குழாய்கள் போன்றவை அமைக்கப்படுவதை அவர்கள் பார்வையிட்டனர்.
கட்டுமானப் பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் இருவரும் அறிவுரை கூறினர்.
முன்னாள் முதல்வர் கருணா நிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதிய மருத்துவமனை திறந்து வைக்கப்படும் எனக் கூறப்பட்டது.
புதிய மருத்துவமனைக்குப் பெயர் சூட்டுவது, திறக்கப்படும் தேதி இரண்டையும் முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

