சென்னை: தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்று இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"ஏற்கெனவே 61 தொகுதிகளில் விளையாட்டரங்கங்கள் உள்ளன. எஞ்சிய 173 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். முதற்கட்டமாக கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 10 தொகுதிகளில் சிறிய விளையாட்டரங்குகள் அமைக்கப்படும்," என்று அவர் கூறினார்.
புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் ரூ.90 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்.
சென்னையின் ஐந்து முக்கிய விளையாட்டரங்குகள் ரூ.25 கோடியில் மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.3 கோடியில் விளையாட்டு அறிவியல் மையம் நிறுவப்படும் என்றும் அனைத்து ஊராட்சிகளுக்கும் ரூ.42 கோடியில் விளையாட்டுக் கருவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

