சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் முப்பது மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் கல்லூரியில் ஏதேனும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்தால் மாணவிகள் உடனடியாகப் புகார் அளிக்க புதிய தொலைபேசி எண்ணையும் அந்த ஆணையத்தின் அதிகாரிகள் வழங்கினர்.
கலாஷேத்ரா விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஐந்து பேர்கொண்ட குழுவை அமைத்துள்ளது மாநில மனித உரிமைகள் ஆணையம்.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் கலாஷேத்ரா கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட ஆறு பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
மேலும் நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் வைத்து முப்பது மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு பல்வேறு தகவல்களைப் பெற்றுள்ளனர்.
இந்த விசாரணை சுமார் ஒருமணி நேரம் நீடித்தது என்றும் மாணவிகள் எதுகுறித்தும் இனி அஞ்சத் தேவையில்லை என்று அதிகாரிகள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும் இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அச்சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.