ராமநாதபுரத்தில் களமிறங்கும் மோடி
ராமநாதபுரம்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரி வித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவதூறு: பாஜக நிர்வாகி கைது
கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவ தூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தமிழக பாஜக மாநில தொழில்துறை பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார் கைதாகியுள்ளார். கோவை மாவட்டம், காளப்பட்டியைச் சேர்ந்த 48 வயதான அவர், தமது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகவும் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ள நோட்டு: மேலும் ஆறு பேர் கைது
செங்கல்பட்டு: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில் ஆறு பேரை செங்கல்பட்டு காவல்துறை கைது செய்துள்ளது. இவ்வழக்கில் ஏற்கெனவே இருவர் கைதாகி உள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் ஆறு பேர் சிக்கியுள்ளனர்.

