சென்னை: தமிழ் மொழி மீது இந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க இயலாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி பேசும் பனாரஸ் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
"இந்தியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சுமசுகிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி.
"பிறமொழிகளைப் பேசுபவர்களும்கூட தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்தியாவின் ஆன்மிக, கலாசாரத் தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டுக்கு 3,500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு என்றும் கூறினார்.
மாணவர்கள் தமிழை ஆழமாகப் படிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழில் அறிஞர்களாக மாறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும்.
"திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன," என்று ஆளுநர் ரவி மேலும் வலியுறுத்தினார்.

