புதுடெல்லி: உலகின் பழைமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வோர் இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் கண்டெடுக்கப்பட் 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கல்வெட்டுகள் ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த அம்சங்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் முருகனின் புதுடெல்லி இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
பட்டு வேட்டி, சட்டையணிந்து வந்த அவர், தமிழ் மொழியின் சிறப்பை தாம் நன்கு அறிந்துள்ள காரணத்தால்தான் ஐநா அவையில் தமிழின் பெருமைகள் பற்றி குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
"உலகின் பழைமையான ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும்கூட இந்தியாதான். இதற்குச் சான்றாக பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
"அவற்றுள் முக்கியமான குறிப்பு ஒன்று தமிழகத்தில் உள்ளது.
"உத்திரமேரூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கிராம சபைக்கான உள்ளூர் அரசியலமைப்பை விவரிக்கிறது. பேரவையை எப்படி நடத்த வேண்டும், உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறை எப்படி இருக்க வேண்டும் என்று அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மேலும், ஓர் உறுப்பினர் எப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதற்கான குறிப்புகளும் காணப்படுகின்றன," என்றார் பிரதமர் மோடி.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலேயே, பிரதமர் இவ்வாறு பேசியதாக கருதப்படுகிறது.
"உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழர்களைக் காணலாம். எங்கு சென்றாலும் தமிழர்கள் தங்களின் கலாசாரம், பாரம்பரியங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அதனால்தான் பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட தமிழ்ப் பண்டிகைகள் உலககெங்கிலும் கொண்டாடப்படுகின்றன.
"இலங்கையில் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள் உதவிக்காகக் காத்திருந்தனர்.
"அங்கு நான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் தொடர்பான காணொளிகள் தமிழகத்தில் வெளியானபோது தமிழ் மக்களிடம் இருந்து நிறைய அன்பைப் பெற்றேன்," என்றார் பிரதமர் மோடி.

