சென்னை: இணையம்வழி நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் புதிய செயலிகளை உருவாக்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
இதற்காக 'சைபர் ஹேக்கத்தான்' என்ற தலைப்பில் நடத்தப்படும் போட்டியில் இளம் தொழில்நுட்பத் தகவல் வல்லுநர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இணைய (சைபர்) குற்றங்களைக் கண்டறிய புதுச் செயலிகள் தேவைப்படுவதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னிலக்க (கிரிப்டோ கரன்சி) பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களைக் கண்டறிதல், குறிப்பிட்ட சொற்களைக் கொண்டு சமூக ஊடகங்களில் தொடர்புடைய பதிவுகளைத் தேடுதல், கண்காணிப்புக் கருவிகளில் பதிவாகும் காட்சிகளில் வழக்கத்திற்கு மாறாகத் தென்படுபவர்கள் அல்லது பொருள்களைக் கண்டறிந்து தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்புதல் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகளை நடத்தஉள்ளது சென்னை காவல்துறை.
இணைய குற்றங்களைக் கண்டறிவதிலும் தடுப்பதிலும் காவல்துறை தீவிரமாக உள்ளது என்றும் புதுச் செயலிகள் இந்த நடவடிக்கைகளில் முக்கியப் பங்களிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

