வழிப்பறி வழக்கில் சிக்கிய காவல்துறை பெண் ஆய்வாளர் பணிநீக்கம்
மதுரை: வழிப்பறி வழக்கில் சிக்கியுள்ள மதுரை காவல்துறை பெண் ஆய்வாளர் வசந்தி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி இரவு, சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தார் வசந்தி. அப்போது தமது தொழில் நிமித்தமாக சில பொருள்களை வாங்க மதுரை வந்திருந்த சிவகங்கையைச் சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். உரிய விளக்கங்களை அளித்த பிறகும் அர்ஷத் வைத்திருந்த பத்து லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்தார் வசந்தி. மறுநாள் அவர் பணிபுரியும் மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்று தமது பணத்தை திருப்பித் தருமாறு அர்ஷத் கேட்டபோது, ஆய்வாளர் வசந்தி பொய் வழக்குப் போடுவதாக மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் அர்ஷத். அதன் பேரில் வசந்தி உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வசந்தி கைது செய்யப்பட்டார். எனினும், பிணையில் வெளிவந்தவர், சாட்சியை மிரட்டியதாக மேலும் ஒரு வழக்குப் பதிவாகி உள்ளது. இதனால் அவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
விபரீதத்தில் முடிந்த மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சபீக் அகமது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த பத்தாம் தேதி அவரது பிறந்தநாளை கல்லூரி விடுதியில் கொண்டாடியபோது, நண்பர்கள் சிலர் அவரை மேலே தூக்கிப்போட்டு விளையாடி உள்ளனர். அப்போது சபீக் அகமது கீழே விழுந்துவிட்டார்.
அதன் பின்னர் நண்பர்கள் சிலர் அவர் மீது ஒருவர் பின் ஒருவராக விழுந்து விளையாடி உள்ளனர். ஆனால், கீழே விழுந்த சபீக், சுயநினைவை இழந்துவிட்டது யாருக்கும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்காததால் பதறிப்போன நண்பர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மூளைக்குச் செல்லும் முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலையில் உள்ளார். சபீக் உயிருக்குப் போராடி வரும் நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்காக இணைப்பு வாகன சேவை தொடக்கம்
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் வசதிக்காக பெண்களே இயக்கும் இணைப்பு வாகனச் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஆறு ரயில் நிலையங்களில் இச்சேவை செயல்பாட்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். "மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பான, நம்பகமான இணைப்பு வாகனச் சேவையை வழங்குவது எங்களின் முக்கிய நோக்கமாகும். இதற்காக பெண்களால் இயக்கப்படும் இருசக்கர வாகனச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. "முதற்கட்டமாக ஐம்பது இருசக்கர வாகனங்கள் இயக்கப்படும். விரைவில் அனைத்து ரயில் நிலையங்களி லும் இந்தச் சேவையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்," என்றார் ராஜேஷ் சதுர்வேதி.
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து இம்மாதம் மீண்டும் விசாரணை
நெல்லை: நெல்லையில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வரும் 17, 18ஆம் தேதிகளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணையை நடத்துவார் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்டோரின் மருத்துவ அறிக்கைகள் வெளியாகி உள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

