தேனி: அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன் மோதலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி பெரியகுளம் பகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் இடையே திடீரென மோதல் வெடித்தது.
அம்பேத்கர் சிலைக்கு யார் முதலில் மரியாதை செலுத்துவது என்பது தொடர்பில் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.
இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இரு தரப்பையும் சேர்ந்த சிலர் திடீரென வடகரை காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
பின்னர் காவல் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் ஆய்வாளரின் வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவற்றின் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
மேலும், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியையும் சிலர் உடைத்தனர்.
பதற்றம் அதிகரித்ததை அடுத்து, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமேஷ் பிரவீன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த உத்தரவிட்டார்.
பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

