உயர் நீதிமன்றத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் 493 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாள்களாக தொற்று பாதிப்பால் தினமும் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள் ளது. இதற்கிடையே, எதிர்வரும் 17ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் தகுதி நீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்றார். ராகுல் காந்தியை குறிவைத்து மத்திய அரசு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா முறைகேடு: முன்னாள் காவல் அதிகாரியை விசாரிக்க அனுமதி
சென்னை: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பில் முன்னாள் காவல்துறை துணைத் தலைவர் டி.கே.ராஜேந்திரனிடம் விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, குட்கா முறைகேடு வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்படுகிறது. மேலும் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட சில அதிகாரிகளும் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர். ஜார்ஜ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது.
புது மாணவர்களுக்கு தங்கக் காசு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாகச் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தங்க காசுகள் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் இந்தப் பரிசுக்குரிய மாணவர் தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவிப்புடன் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

