குமரி: திருமணமான எட்டு மாதங்களில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை நாகர்கோவில் காவல்துறை கைது செய்துள்ளது.
பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த சேம் மரியதாசுக்கும் 23 வயதான ஜெனிலாவுக்கும் எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கணவர் வீட்டாருடன் பெங்களூரில் வசித்து வந்தார் ஜெனிலா.
இந்நிலையில் சேம் மரியதாசுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து ஜெனிலா அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் மூண்டுள்ளது. இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி இரவு வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஜெனிலாவை கத்தியால் குத்தி கொலை செய்தார் சேம் மரியதாஸ். மறுநாள் அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, உடல் கூராய்வுக்குப் பின்னர் ஜெனிலாவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரியதாஸ் மீது கடும் கோபத்தில் இருந்த ஜெனிலாவின் உறவினர்கள் அவரது உடலை பெங்களூரில் அடக்கம் செய்யாமல் மரியதாசின் சொந்த ஊரான திப்பிரமலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மரியதாஸ் வீட்டு வாசலில் ஜெனிலா உடல் அடக்கம் செய்யப்பட்டது. மரியதாசுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் இவ்வாறு செய்ததாக ஜெனிலா தரப்பில் கூறப்பட்டது.
இறுதிச்சடங்கின்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

