எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என தமிழ் வளர்ச்சித்துறை தகவல்
சென்னை: தமிழக அரசின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட சொற்குவை இணையத்தளத்தில் இதுவரை பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
தற்போது பல்வேறு துறைகள் சார்ந்த புதிய பிறமொழி சொற்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் போதுமான அளவில் இல்லை.
இதையடுத்து, தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் புதிய தமிழ் சொற்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அகராதி உருவாக்கம், கலைச்சொல் உருவாக்கம், வட்டார வழக்கு சொற்கள் உருவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்த இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
"பல்வேறு துறைகள் சார்ந்த கலைச் சொற்களை அடையாளம் காண்பதிலும் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவதிலும் வல்லுநர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.
"புதிய சொற்களுக்கு வல்லுநர்களின் ஒப்புதல் பெறப்பட்டதும் 'சொற்குவை டாட் காம்' எனும் இணையத்தளத்தில் அவை பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
"அந்த வகையில், இதுவரை 10 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சொற்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
"இவை இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறையினருக்கும் பயனுள்ளதாக அமையும். இம் முயற்சிக்கு இளையர்களும் பங் களிக்க வேண்டும்," என்று தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

