திருப்பரங்குன்றம்: மதுரை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமிழக அரசு ரூ.8,500 கோடி செலவில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து உள்ளது.
கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டில் தொடங்கி 2027ஆம் ஆண்டில் ரயில் சேவையைத் தொடங்க வியூகம் வகுத்துள்ள மாநில அரசு, முதல் கட்டமாக திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அரை கிலோ மீட்டர் இடை வெளியில் சாலை ஓரத்தில் மண் பரிசோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒத்தக்கடை முதல் சுமார் 76 இடங்களில் பூமியில் 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு அப்பகுதியில் உள்ள மண்ணின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய மண்ணும் பாறைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் 100க்கும் மேற்பட்ட பொறியாளர் குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். பரிசோதனைக்காக எடுக்கப்படும் மண்ணும் பாறைகளும் ஹைதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும். அதில் மொத்தம் 10 ரயில் நிலையங்கள் இருக்கும்.

