செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

மதுரை யானைக்காக தொட்டி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டது. அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை அடுத்து யானை உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த யானையின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ரூ.23.50 லட்சம் செலவில் குளியல் தொட்டி (படம்) அமைக்கப்பட்டது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதைத் திறந்து வைத்தார்.

ரூ.2 கோடி பொருள்கள் சிக்கின

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.08 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3.4 கிலோ தங்கம், ஐ-போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணுச் சாதனங்கள் முதலானவை அவற்றில் அடங்கும் என்றும் இதன் தொடர்பில் நால்வர் கைதாகி விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தென்னந்தோப்பு மோசடி: முன்னாள் துணைவேந்தர் கைது

சென்னை: சேலையூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தூயமணி, 68, என்பவர், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தனது தென்னந்தோப்பை விற்பதாகச் சொல்லி, தரகர் மூலம் ரூ.1.90 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு விவசாயி ஒருவரை ஏமாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜசேகர் என்ற அந்த விவசாயி தாக்கல் செய்த புகாரின் பேரில் தூயமணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை, 61 நாட்கள் விசைப்படகுகள் மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் நாட்டுப் படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாக தகவல்கள் கூறின.

தீயை அணைக்க ஹெலிகாப்டர்

கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன் புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி மூண்ட காட்டுத்தீயை அணைக்க அதிகாரிகள் இரவும் பகலமாக முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இடங்களில் தீத் தடுப்புக் கோடுகளை அமைத்து, எதிர்த் தீ வைத்து, தீ மேற்கொண்டும் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

காட்டுத் தீ காரணமாக வனவிலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

பல இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தமிழ் நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது. அதை அடுத்து நேற்று தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தது.

அந்தப் பேரணிகளுக்கு அனுமதி அளித்த தமிழக காவல்துறை, பேரணிகளுக்கு 12 கடுமையான நிபந்தனைகளையும் விதித்து இருந்தது.

பல இடங்களில் ஊர்வலத்தைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற இருந்தது. அதனை முன்னிட்டு அப்பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.