தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 74ஆக அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் புதிதாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இரண்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகும்.
இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 350 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 74ஆக அதிகரிக்கும்.
இதேவேளையில், தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் 11,575 ஆக உயர்கிறது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியை அடுத்து, ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை தொடங்க உள்ளது. இக்கல்லூரி எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது.
இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரியிலும் எம்பிபிஎஸ் படிப்புக்கு 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 350 மாணவர்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு அமைந்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என தமிழக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. மேலும், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட தமிழகத்தில் 38 அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.
ஈராண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மேலும், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஆறு இடங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
மேலும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 250 இடங்களை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்பட்டது.

