சென்னை: தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
12 மாவட்டங்களில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், போக்சோ வழக்குகளை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஒரு மாவட்டத்தில் சிறார்களுக்கு எதிரான 300க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் ராமதாஸ் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
இத்தகைய சூழல் தமிழகத்தில் உள்ளது என்றும் 12 மாவட்டங்களில் தலா முந்நூற்றுக்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறிஉள்ளார்.
"இதனால் அக்குறிப்பிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.
"அப்போதுதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் அஞ்சுவார்கள். அந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன," என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதைப் புரிந்து கொள்ளாமல் சி்றப்பு நீதிமன்றங்களை அமைக்க தாமதிப்பது சரியன்று என்றும் இது குற்றவாளிகள் தப்பிக்கவும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கும் காரணமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

