காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் விமான நிலையத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்்த்து நேற்று முன்தினம் ஏகனாபுரம் கிராம மக்கள் மொட்டையடித்துக் கொள்ளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்ததை அடுத்து, அங்கு நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
விமான நிலையம் அமைக்கப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 264வது நாளாக, பாதிக்கப்படும் கிராமங்களில் ஒன்றான ஏகனாபுரத்தில் மக்கள் மொட்டையடித்து கொள்ளும் நூதனப் போராட்டடம் நடைபெற்றது.
விமான நிலையத்துக்காக பரந்தூரில் ஏறத்தாழ 4,500 ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புகள், பாசன கால்வாய் உள்ளிட்டவை கையகப்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது 200க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்துக்கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.