சென்னை: தைவானைச் சேர்ந்த 'பௌ சென்' எனும் உலகப் புகழ்பெற்ற காலணித் தயாரிப்பு நிறுவனம், தமிழகத்தின் உளுந்தூர்பேட்டையில் காலணித் தயாரிப்பு ஆலையைத் தொடங்கவுள்ளது.
இதன் தொடர்பில் அடுத்த 12 ஆண்டுகளில் 2,302 கோடி ரூபாயை அது முதலீடு செய்ய இருக்கிறது.
'பௌ சென்' நிறுவனம், உலகப் புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராகச் செயல்படுகிறது. அந்த வகையில், 'பௌ சென்' குழுமத்தைச் சேர்ந்த 'ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா' நிறுவனம், காலணிகளை உற்பத்தி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் அந்த ஆலை அமைக்கப்படும்.
அதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் கையெழுத்தானது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசாங்கமும் 'ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா' நிறுவனமும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டன.
தொழில் வளர்ச்சி, மாநிலம் முழுவதும் பரவலாக இருக்கவேண்டும் என்னும் அடிப்படையில் பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாய் இந்த ஒப்பந்தம் அமைவதாகக் கருதப்படுகிறது.
புதிய காலணி உற்பத்தி ஆலை மூலமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அதைச் சுற்றிஉள்ள பகுதிகளையும் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணி மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு, அதன் நிலையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த ஆலை உதவும் எனக் கருதப்படுகிறது.

