பொட்டலமிட்ட உணவுப் பொருள்கள் தொடர்பில் பரிந்துரை
சென்னை: பொட்டலமிட்ட உணவுப் பொருள்களில் சேர்க்கப்பட்டு உள்ள உட்பொருள்களின் தகவல்களைத் தெளிவாக அச்சிட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொட்டலமிட்ட உணவுப்பொருள்களில் கொழுப்புச் சத்து, சர்க்கரை, உப்பு போன்றவற்றின் அளவைத் தெளிவாக அச்சிடும்படி வலியுறுத்த வேண்டும் என்று தமிழக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் பரிந்துரைத்து உள்ளார்.
மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"பொட்டலமிடப்பட்ட ஓர் உணவுப் பொருளில் கொழுப்புச்சத்து, சர்க்கரை, உப்பு ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்பட்டிருந்தால் அது மக்களின் உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கும்.
"அத்தகைய உணவுகளால் உடற்பருமன், நீரிழிவு, இதய நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
"இதன் தொடர்பில் அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தகைய உணவுகளை உட்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக உள்ளது.
"அதைக் கருத்தில்கொண்டு,
பொட்டலமிடப்பட்ட உணவுகளில் சேர்க்கப்பட்டிருக்கும் ஊறு விளைவிக்கவல்ல உட்பொருள்களின் தகவல்களை அவற்றின் உறையின்மேல் தெளிவாக அச்சிடும்படி வலியுறுத்த வேண்டும்.
"இதற்கான நடவடிக்கையை உணவுப் பாதுகாப்புத் துறை மேற்கொள்ள வேண்டும்," என்று டாக்டர் செல்வ விநாயகம் கூறினார்.
"பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிறக் குறியீடுகள் மூலமாகவோ வேறு வகையான எச்சரிக்கைக் குறியீடுகள் மூலமாகவோ அதனைக் குறிப்பிடவேண்டும்.
"சராசரியாக ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய கொழுப்புச்சத்து, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவையும் அதைவிட எத்தனை மடங்கு அதிகமாக அந்தப் பொட்டலத்தில் உள்ள உணவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் அச்சடித்தல் அவசியம்," என்று தமது கடிதத்தில் டாக்டர் செல்வ விநாயகம் வலியுறுத்தியுள்ளார்.
பொட்டலங்களின் உறையில் ஊறு விளைவிக்கும் பொருள்களின் அளவுகள் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் மக்கள் அவற்றை வாங்குவது குறித்து முடிவெடுக்க ஏதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

