சென்னை: மனிதர்களின் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை எளிதாகவும் நம்பகமான முறையிலும் மதிப்பீடு செய்யும் கருவியை சென்னை 'ஐஐடி' எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
'ஆர்ட்சென்ஸ்' என்று அழைக்கப்படும் கருவி, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்துடன் வயதையும் மதிப்பிட வல்லது எனக் கூறப்பட்டது.
உடலின் உயிரணுக்களுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பயன்படுத்தக்கூடிய அக்கருவியின் உதவியுடன் இதய நோய்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என்கின்றனர் 'ஐஐடி' ஆய்வாளர்கள்.
'ஆர்ட்சென்ஸ்' கருவியை, மருத்துவத் துறையினர் மட்டுமன்றி சாதாரண மனிதர்களும் பயன்படுத்தலாம்.
ஏறக்குறைய 5,000க்கு மேற்பட்டோரிடம் அந்தக் கருவியைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா ஆகியவற்றில் பயன்பாடு தொடர்பான ஐந்து காப்புரிமைகளை அந்தத் தொழில்நுட்பம் பெற்றுள்ளது.
தொழில்நுட்பப் பரிமாற்றம், வணிகப்படுத்துதலுக்கு அந்தக் கருவி தயார்நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
நெதர்லாந்தில் உள்ள ராட்பௌட் பல்கலைக்கழக மருத்துவ நிலையம், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் 'ஆர்ட்சென்ஸ்' கருவியைப் பயன்படுத்தி ரத்த நாளங்களின் வயதுக்கும் பல்வேறு நோய்கள், உடல் இயக்கமின்மை போன்றவற்றுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

