அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் காவல்துறை உயரதிகாரிமீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்தப் புகார் தொடர்பில் அம்பாசமுத்திரம் காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் (படம்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அந்த விவகாரம் தொடர்பில், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் முழுமையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.
முதலில் மாவட்ட உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. பின்னர், ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து மாநில அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் விசாரணை அதிகாரி அமுதாவிடம், பாதிக்கப்பட்டவர்கள் நேற்று அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் விளக்கம் அளித்தனர்.
ஏறத்தாழ 30 பேர் பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிங்கிற்கு பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

