குற்றத்தை மறைக்க ரூ.5 கோடி
சென்னை: 89,000 பேரிடம் ரூ. 6,000 கோடி வசூலித்து மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற புகாரின் பேரில் பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி கபிலன் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதாகவும் கபிலன் வீட்டிலிருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இறுதிக்கட்டத்தில் கொலை வழக்கு
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக உயர் நீதிமன்றக் கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. இன்னும் ஆறு சாட்சிகளை மட்டுமே விசாரிக்க உள்ளதாக அது கூறியது. கொரோனா காலத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் (படங்கள்) சித்திர வதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர் ஸ்ரீதருக்கு பிணை வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அவசர மனு
புதுடெல்லி: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தம்மை அக்கட்சி பொதுச்செயலாளராக இன்றே அங்கீகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. முன்ன தாக, இது குறித்து முடிவெடுக்க 10 நாள் அவகாசம் வேண்டுமென்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
அனல் காற்று, அதிக வெப்பம்
புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு நிலையம் பல பகுதிகளுக்கு வெப்பக்காற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பல மாநிலங்களில் கடந்த வாரம் ஆரெஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் வெப்பக்காற்று தீவிரமாக வீசும் என்றும் அதன் காரணமாக வெப்பநிலை உச்சம் தொடும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
விஜய் வந்தால் வலிமை: சீமான்
சென்னை: "நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வலிமையாக இருக்கும். விஜய்யை நான் ஆதரிக்க வேண்டிய தில்லை. அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்," என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

