தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் ஆதரவாளர்கள் உற்சாகம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பழனிசாமியின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
எனினும், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவானது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் நீதிமன்றத்தை அணுகினர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் தரப்பின் கை ஓங்கியது. அவருக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் பொதுக்குழு தீர்மானத்தின்படி, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
எனினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பின்வாங்கவில்லை. சட்டப்போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பும் நீதிமன்றத்தை நாடியது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு கேட்டுக்கொண்டது. எனினும், தேர்தல் ஆணையம் முடிவெடுக்க நேரம் எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதால் இரு தரப்பினரும் இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்ற முயன்றனர்.
இரு தரப்பினரும் தேர்தலில் களமிறங்க முடிவு செய்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் பத்து நாள்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளையில் பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தது.
அம்மனுவை பரீசித்த தேர்தல் ஆணையம் நேற்று தனது முடிவை அறிவித்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
எனினும் இந்த முடிவானது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.
இதனால் பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் மூலம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இபிஎஸ் தரப்பு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

