நெல்லை: விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களின் பற்களைப் பிடுங்கியதாக நெல்லை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை மேற்கொண்டது.
அக்குழுவினர் அளித்த இடைக்கால அறிக்கையில் சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
முன்னதாக, பல்வீர் சிங்கால் சித்திரவதைக்கு ஆளானதாகக் கருதப்படும் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை திகிலுடன் விவரிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கும் அவருக்கு துணையாக இருந்த காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதிகாரி பல்பீர் சிங் மீது கொலை மிரட்டல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நெல்லை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இனி சிபிசிஐடி விசாரிக்க உள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். அடுத்த கட்டமாக பல்வீர் சிங்கை நேரில் அழைத்து விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்யப்பட்டதை வெளியே சொல்லக்கூடாது என பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டுவதாகப் புதுப்புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சித்திரவதைக்கு ஆளானதாகக் கருதப்படும் சூர்யா என்பவர் விளக்கம் அளித்துள்ளார். உண்மையைச் சொன்னால் தன் மீது வேறு வழக்குகள் பதிவாகும் என காவல்துறையினர் மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

