சென்னை: அரசுப் பேருந்தில் இருந்து இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைவர் சச்சின் சிவா (படம்) அதன் நடத்துநரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா, புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து மதுரை செல்ல, கழிப்பறை வசதியுடன் கூடிய விரைவுப் பேருந்தில் ஏறினார்.
ஆனால் பேருந்து நடத்துநர் ராஜாவோ, அக்குறிப்பிட்ட பேருந்தில் மாற்றுத் திறனாளிகளால் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சச்சின் சிவாவுக்கு நடத்துநர் ராஜா மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து நடத்துநர் ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளி பயணியிடம் பேருந்தில் கண்ணிய குறைவாக நடந்துகொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நடத்துநர் ராஜாவுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சச்சின் சிவாவுக்கு ஆதரவாக பலர் கருத்துகளைப் பதிவிட்டனர்.

