இலங்கையில் இருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக வருகை
தூத்துக்குடி: கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஐந்து பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். வவுனியா மாவட்டம் தேக்கன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான சாந்தகுமார், அவரது மனைவி, மூன்று குழந்தைகள் நேற்று முன்தினம் காலை படகு ஒன்றில் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தனர். இலங்கை பணம் ரூ.1 லட்சம் வழங்கி படகில் வந்த ஐந்து பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொருளியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இதுவரை 238 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
தூத்துக்குடியில் 60 அடி தூரம் கரையைக் கடந்து வந்த கடல் நீர்
தூத்துக்குடி: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி கடல்பகுதி அதிக சீற்றத்துடன் காணப்படுவதாக கடலோரப் பகுதிகளில் வசிப்போர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தாளமுத்து நகர், மொட்டை கோபுரம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக நேற்று முன்தினம் கடல்நீர் கரையைத் தாண்டி சுமார் 60 அடி தூரம் ஊரை நோக்கி வந்தது. கடற்கரை சாலை வரை கடல் நீர் வந்ததால் கரையோரத்தில் உள்ள மீன் ஏலக்கூடம், ஆலயம் உள்ளிட்டவற்றை கடல்நீர் சூழ்ந்தது. கடல் அலையின் வேகமும் அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் இரண்டு போலி மருத்துவர்கள் அதிரடிக் கைது
காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் கைதாகி வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் இரண்டு போலி மருத்துவர்கள் கைதாகி உள்ளனர். கடந்த சில நாள்களாக மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இயக்குநர் தலைமையில் காவல்துறையினர் அடங்கிய குழு ஒன்று திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு கைது செய்கிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் நிமிந்தகரை வீதி, காமாட்சியம்மன் சன்னதி தெருவில் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த இருவரை இக்குழு கைது செய்தது.
கொரோனாவுக்கு இருவர் பலி
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகிவிட்டனர். நேற்று முன்தினம் புதிதாக மேலும் 542 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. இவர்களில் 259 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் ஆக அதிகமாக 116 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,563ஆக அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் உயிரிழந்துவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
முதல்வர்: கோடநாடு கொலை வழக்கு குற்றவாளி விரைவில் கைதாவார்
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மைக் குற்றவாளியை காவல்துறை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முன்னாள் முதல்வர் இருந்த இடத்தில் நடைபெற்ற விவகாரம் இது என்றும் அதனால் சாதாரண விவகார மாகக் கருத இயலாது என்றும் குறிப்பிட்டார். "கோடநாடு வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத் தருவோம்," என்றார் முதல்வர் ஸ்டாலின். முந்தைய அதிமுக ஆட்சியின்போது கோடநாடு வழக்கு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் திமுக ஆட்சியில்் தவறுகள் நிகழ்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

