செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலத் தொடக்கம்

மதுரை: கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா மதுரையில் கோலாகலமாகத் தொடங்கி உள்ளது. தொடக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் விழாக் களில் சித்திரை திருவிழா முதன்மையானது ஆகும். கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா எதிர்வரும் மே 5ஆம் தேதி நடைபெறும்.

சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்க அன்புமணி வலியுறுத்து

சென்னை: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் ஏராளமான தமிழர்கள் உணவுகூட கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். "சூடானில் உள்ள தமிழர் களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கான உணவுகூட கிடைக்காததால் ஒவ்வொரு நிமிடமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்," என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

முந்திரிக் காட்டில் கண்ணி வெடி வெடித்ததில் நால்வர் படுகாயம்

கடலூர்: முந்திரிக் காட்டில் முந்திரிக் கொட்டைகளைச் சேகரித்துக்கொண்டிருந்த நான்கு பேர் கண்ணி வெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். விருத்தாசலம் பகுதியில் உள்ள முந்திரிக் காட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் உள்ளிட்ட நான்கு பேர் ஆலடி அருகே உள்ள முந்திரிக் காட்டுக்குச் சென்றிருந்தனர். அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி ஒன்று வெடித்து நால்வரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கால் துண்டானது.

எந்தக் காரணத்தை முன்னிட்டு அங்கு கண்ணி வெடி புதைத்து வைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.