'காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் களையெடுக்கப்படுவர்'
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
சிகரெட், பிற புகையிலைப் பொருள்கள் சட்டத்தின்கீழ் கடந்த அதிமுக ஆட்சியில் 40,246 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாகக் குறிப்பிட்ட முதல்வர், நடப்பு திமுக ஆட்சியில் இதுவரை பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 63, 656 வழக்குகள் எனச் சுட்டிக்காட்டினார்.
அதிமுக ஆட்சியில் 37,846 பேர் கைது செய்யப்பட்டதாகவும் திமுக ஆட்சியில் கைது செய்யப் பட்டவர்கள் எண்ணிக்கை 65,480 என்றும் முதல்வர் தெரிவித்தார்.
"2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் 122,000 கிலோ. நடப்பு ஆட்சியில் 337,295 கிலோ பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
"தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப்பொருள்கள் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 5,403 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன எனில், திமுக ஆட்சியில் 2022ல் மட்டும் 10,391 வழக்குகள், அதாவது இரண்டு மடங்காக வழக்குகள் போடப்பட்டுள்ளன.
"இதன் மூலம் நடப்பு அரசு போதைப்பொருள்களை ஒழிப்பதில் தீவிரத்தைக் காட்டி வருவதை அறியலாம்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின.
போதைப்பொருள்களை விற்பனை செய்தவர்களின் 5,723 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காவல் துறையினர் நேர்மையாக நட வடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பாராட்டினார்.
"அதேசமயம் காவல்துறையில் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அத்தகையவர்களை அதிகாரிகள் தற்போது களையெடுத்து வருகிறார்கள்.
"போதைப்பொருள்கள் அறே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்குடன் இரவு, பகல் பாராமல் காவல்துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்," என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

