சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் தற்போதைய நிலவரப்படி, 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது தெரியவந்து இருக்கிறது.
மத்திய தணிக்கைத்துறை தலைவர் அறிக்கையில் இது தொடர்பான மேலதிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகூட இல்லை என்றும் வகுப்பறை பற்றாக்குறை காரணமாக பள்ளி வகுப்புகள் திறந்தவெளிகளில், மர நிழலில் நடத்தப்படுகின்றன என்றும் கணக்குத் தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ஆண்டுதோறும் அனைத்து அரசுத்துறைகள் தொடர்பான பல்வேறு முக்கியத் தகவல்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையில் பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றின்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பது அம்பலமாகி உள்ளது.
மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதத்தின் அடிப்படையில், தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஏராளமான பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள், பணியாளர்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளியில் இடைநிற்றலைக் குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய அரசு தவறிவிட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.