சென்னை: தாம் பேசியதாக வெளியாகி உள்ள ஒலிப்பதிவு போலியானது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமக்கு தீங்கு இழைக்கும் நோக்கில் இந்த ஒலிப்பதிவு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சிப்பது போன்ற ஒரு ஒலிப்பதிவு அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி பலரால் பகிரப்பட்டது.
இதனால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தாம் பேசியதாக வெளியான 26 நொடிகள் நீடிக்கும் ஒலிப்பதிவு முற்றிலும் பொய்யானது என அமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததைவிட கடந்த ஓராண்டில் அதிகம் சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுவது போல் சர்ச்சைக்குரிய அந்த ஒலிப்பதிவு அமைந்துள்ளது.
"இந்த காலத்தில் குறைந்த தரத்தில் 26 விநாடிகளுக்கு ஒரு ஒலிப்பதிவை உருவாக்குவது கடினம் அல்ல.
"செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல்களைக் கொண்டு ஒரு திரைப்படமே உருவாக்கப்பட்டுவிட்டது.
"அதனைப் பல தளங்களில் இதுவரை 16 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர்," என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அந்த ஒலிப்பதிவு தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தை தமிழக பாஜக கையில் எடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு குறித்து சுதந்திரமான தடயவியல் ஆய்வை மேற்கொள்ள விடாமல் அமைச்சரைத் தடுப்பது எது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

