முதல்வர்: இளையர்களைப் பாதுகாக்க ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன
சென்னை: பயங்கரவாதக் குழுக்களால் தமிழக இளையர்கள் பயங்கரவாதிகளாக மாறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களைப் பாதுகாக்க சமய அறிஞர்கள், உளவியலாளர்கள், பெற்றோர்களின் உதவியுடன் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைப்பது, கடலோர மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய பாதுகாப்புப் பணிகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளதாக உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில காவல்துறை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், தமிழக எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்தல், கடலோர மாவட்டங்களில் சோதனை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளும் தீவீரமாக நடைபெறுவதாகக் கூறினார்.
"சமய மோதல்கள் இல்லாத அமைதிப் பூங்காவாகத் தமிழகம் உள்ளது. இதற்கு உளவுப் பிரிவின் முயற்சியே காரணம்.
"கோயம்புத்தூர் கார் வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மாநில அரசு விரைவாகக் கைது செய்ததுடன், அனைத்துலக அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பரிந்துரைத்தது.
"இதுபோன்ற வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் காவல் நிலைய மரணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வந்த வதந்திகளுக்கு எதிராக அரசு துரித நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், இதனால் பெரும் மோதல்கள் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது யார்?
"கோடநாடு வழிப்பறி, கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியையும் சேர்த்துள்ளோம். தற்போது நடைபெற்று வரும் சிபிசிஐடி விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

