தமிழகத்தின் 'ஜி ஸ்கொயர்' அலுவலகங்களில் திடீர் சோதனை

தமிழகத்தின் 'ஜி ஸ்கொயர்' அலுவலகங்களில் திடீர் சோதனை

2 mins read
2be30f4c-d733-43ef-975e-89f282a45b4e
ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

தமிழகத்தின் மிகவும் பிரபலமான ஜி ஸ்கொயர் சொத்து நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் திங்கட்கிழமையன்று (24 ஏப்ரல்) அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

அதிகாலையில் சோதனை தொடங்கியது.

ஒரே நேரத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் சோதனை தொடங்கியதாக உள்ளூர் ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்ப்பேட்டை போன்ற இடங்களில் செயல்படும் ஜி ஸ்கொயர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஜி ஸ்கொயருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சென்னை அண்ணா நகர் திமுக எம்எல்ஏ மோகன், அவரது மகன் ஆகியோரின் வீட்டிலும் சோதனை நடந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டு முன்பு குவிந்த திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரேநேரத்தில் ஏராளமான நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும் குறைந்த காலத்திலேயே அதிக வருமானத்தை ஈட்டியதாகவும் ஜி ஸ்கொயர் மீது புகார் கூறப்படுகிறது.

அண்மையில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் பல்வேறு ஊழல்களை வெளியிடுவதாகக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்.

அப்போது இந்நிறுவனத்தின்மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் வருமான வரித் துறையின் சோதனை நடந்துள்ளது.

இதற்கிடையே தங்கள் நிறுவனம்மீது அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று ஜி ஸ்கொயர் தெரிவித்துள்ளது.

"ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல. திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பே பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் தொழில் செய்து வருகிறது.

"ஜி ஸ்கொயர் மற்றும் அதன் பங்குதாரர்களின் கட்டுமானத் திட்டங்களின் மதிப்பு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் சொத்து குறித்து அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது," என்று ஜி ஸ்கொயர் அறிக்கையின் மூலம் விளக்கமளித்தது.